ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகிய சம்பவங்களில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதுவா மாவட்டத்தின் ஜோத் காதி பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், இதெல்லாம் ஜங்லோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இரண்டு சம்பவங்களும் இன்று நள்ளிரவில் சம்பவித்துள்ளன.
இந்த சம்பவத்தினால் ரயில் பாதை ஒன்றும் , தேசிய நெடுஞ்சாலை-44 மற்றும் ஒரு காவல் நிலையமும் சேதமடைந்துள்ளதாகக் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜிதேந்திர சிங், குறிப்பிட்டுள்ளார்.
“குடிமை நிர்வாகம், ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகியவை உடனடியாக நடவடிக்கையில் இறங்கின. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,” என்று கதுவாவில் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியிடம் பேசிய பிறகு அவர் X இல் பதிவிட்டார்.
“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்
இதேநேரம் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட கதுவா மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேக வெடிப்புக்குப் பிறகு கதுவா மாவட்டத்துக்கான வானிலை ஆலோசனை வெளியாகியுள்ளது.
இதற்கமைய மாவட்டம் முழுவதும் கனமழைபெய்யும் என்றும் பொதுமக்கள் நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொண்டது.
“பொதுமக்கள் ஆறுகள், ஓடைகள், மற்றும் பிற நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும், மலைப்பாங்கான மற்றும் நிலச்சரிவு மற்றும் பிற ஆபத்து நிறைந்த பகுதிகளைத் தவிர்க்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனமழை காரணமாக, நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும்,” என்று கதுவா மாவட்ட தகவல் மையம் X தள பதிவில் தெரிவித்துள்ளது.
அத்துடன் பின்வரும் உதவி எண்களையும் வெளியிட்டது: 01922-238796 மற்றும் 9858034100.