செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்இலங்கை விஷயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் -கோட்டைக்கல்லாறு பாலத்தில் அருகாமையில் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம.; இந்த போராட்டமானது நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இந்த போராட்டம் 23 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்த மூன்று நாட்களில் நடைபெற இருக்கின்றது. நாங்கள் அந்த யாழ் மாவட்டத்திலே அந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வலுச்சேக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த விடயத்திற்கான பூரணமான ஆதரவும் இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்று நாங்களும் விரும்புகின்றோம் என்கின்ற செய்தியை சொல்வதற்காக இந்த மாபெரும் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அந்த வகையில் கட்சி பேதங்கள் இன்றி எங்களுடைய அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். ஏனென்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த செம்மணியில் மாத்திரம் அல்ல கடந்த காலத்தில் கொக்குத்தொடுவாயிலும் கூட கண்டெடுக்கப்பட்ட அந்த விடயங்களுக்கு எந்த வகையான நீதியும் இதுவரைக்கும் கிடைக்கப் பெறவில்லை.
ஏனென்றால் 99 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதே போன்ற செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட இந்த மனித புதைக்குழிக்கு விசாரணைகளுக்கு அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து விசேடமான ஒரு குழுவினர் உடைய ஆதரவையும் அரசாங்கம் அந்த நேரத்தில் கேட்டிருந்தது.
இப்போது எது வித சர்வதேச மேற்பார்வையும் இல்லாமல் எதுவிதமான அனுபவம் உள்ள இந்த விடயம் தொடர்பான ஆழமான அனுபவம் உள்ள எந்த தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தில் இல்லாத நிலையிலும் கூட இந்த விசாரணைக்காக சர்வதேச உதவியை நாடுவதில் இலங்கை அரசாங்கம் தயங்கி நிற்கின்றது இதற்கான காரணம் என்ன என்பதனையும் நாங்கள் இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றோம்.
அண்மையில் மிராக் ரஹீம் அவருடைய அறிக்கையிலே கூறப்பட்டிருக்கின்றது இலங்கையில் இந்த விடயங்களை பற்றி ஆராய கூடிய போலீஸ் பிரிவாக இருக்கட்டும் உண்மையில் பாதுகாப்பு பிரிவிலே தற்போது நடைபெற்று இருக்கும் ஒரு விடயம் தொடர்பாக தடயவியல் ரீதியாக ஆரவதற்கான விஞ்ஞான ரீதியான தொழிற்ப ரீதியான தேவைகள் இருக்கின்றது.
ஆனால் 25 வருடங்களுக்கு முன்னால் இடம் பெற்ற சம்பவத்தை ஆராய்வதற்கு வேண்டுமான விசேடமான தேவையான வளங்கள் அல்லது தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுகள் இலங்கை அரசுக்கு இல்லை என்பது இந்த அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த மனித புதைக்குழியை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அளவு தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாததன் காரணத்தினால் இதற்கு சர்வதேச உதவியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டும். இதிலும் குறிப்பாக மனித புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் அதிகளவில் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆடைகள் அதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை இது ஒரு பாரிய சந்தேகத்தை தரும் ஒரு விடயம்.
இந்த விடயத்தை நேர்மையாக இலங்கை அரசாங்கம் விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை எங்களுக்கு இல்லை அந்த வகையில் இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணையாளரின் கவனத்திற்கு ஈர்க்கும் வகையாக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆணையாளரும் அந்த இடத்தை சென்று பார்வையிடுவதற்கு எதுவித எதிர்ப்பும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்து இருக்கின்றார். நானும் செம்மணி போராட்டத்தில் கலந்து கொள்வேன்.
செம்மணியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அந்த ஆணையாளர் வருகையினை தடை செய்யும் வகையாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமல் அவருக்கு அந்த இடத்திற்கு வருகை தந்து மனித புதை குழியினை பார்வையிடக்கூடிய வகையாக எங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அவர் அங்கு வருகை தர விரும்பினால் அதற்காக அந்த போராட்டக் களத்தில் இருப்பவர்கள் அதற்கான வழிகளையும் கொடுக்க வேண்டும் என்பதனை இந்த இடத்திலே அன்பாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அதே போன்று தான் நான் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்காக நேரம் கிடைத்தால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் இவ்வாறான இடங்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கின்ற பலமான கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றேன்.
ஏனென்றால் வட மாகாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் பல இடங்களில் குறிப்பாக கடந்த காலங்களில் தீவுச்சேனை பிரதேசத்தில் இவ்வாறான பல இடங்கள் இருப்பதாக ஊடகங்களின் ஊடாக பல சாட்சியங்கள் வெளிவந்திருந்தன.
இந்த விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அந்த சாட்சியங்களை பாதுகாத்து சாட்சியை தர வருபவர்களை வைத்து அவர்களிடம் இருந்து இருக்கும் ஆதாரங்களை எடுத்து கிழக்கு மாகாணத்திலும் எமது மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
தமிழர் தாயகத்தில் வாழும் நமது மக்கள் அனைவருக்கும் நீதி மறுக்கப்படுவதற்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டமாக இதனை பார்க்கின்றோம் அந்த வகையிலே தான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தும் வகையாக தான் நாங்கள் நாளைய தினம் மாலை இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
குறிப்பாக இதனை நாங்கள் கல்லாறு பகுதியில் ஏற்பாடு செய்த நோக்கம் அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் எமது உறவுகள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கூடிய வகையாக இருக்கும்.
நாளைய தினம் இந்த போராட்டத்தை ஒரு மாபெரும் போராட்டமாக முன்னெடுத்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.