யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று புதன்கிழமை நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்தே வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி கடந்த மாதம் 6ஆம் திகதி நிறைவடைந்தது. 3 கட்டங்களாக 54 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 240 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு 239 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதேவேளை, அந்தப் பகுதியில் இன்னமும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதையடுத்து, அங்கு 8 வார காலம் ஆய்வைத் தொடர்வதற்குச் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் நீதிமன்றிடம் கோரிக்கை வைத்தார். இதற்கான பாதீட்டு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.