‘சூர்யா 46’ படத்தின் நிலை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி. ’கருப்பு’ படத்தின் பணிகளை முடித்து வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.
’சூர்யா 46’ படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி தயாரிப்பில் ‘மாஸ் ஜாத்ரா’ உருவாகி இருக்கிறது. ரவி தேஜா நடித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துகொள்கிறார். மேலும், இதுவரை ‘சூர்யா 46’ குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார் நாக வம்சி.
முதன்முறையாக “’சூர்யா 46’ படத்தின் 55 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முழுக்க குடும்பத்தின் பின்னணியில் உருவாகும் கதையாகும். இப்படத்தை தென்னிந்தியாவில் மட்டுமே விளம்பரப்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் நாக வம்சி. இதன்மூலம் இந்தியில் இப்படம் வெளியாகாது என்பது உறுதியாகிறது.

