சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் போலியான செய்திகளை எதிர்கொள்ளவும், ஒளிப்பரப்புத் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு ஊடக ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் உலகளாவிய நாகரீக உரையாடல் மாநாட்டில் கலந்துக்கொள்ள, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், சீனாவுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டு தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி அதிகாரத்துவத்தின் அமைச்சர் காவொ ஷுமினை அவர் இன்று சந்தித்தார்.
அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்புகளை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பில், கூட்டுத் தயாரிப்புகளை அதிகரிப்பது, தவறான தகவல்களை எதிர்ப்பது, பயிற்சி திட்டங்களைத் தொடங்குவது, கலாசார பரிமாற்றங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் தங்களது ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
த்துடன், இருதரப்பு அமைச்சர்களும், சீன அரசின் மத்திய தொலைக்காட்சி மற்றும் பாகிஸ்தானின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி இடையில் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவித்து, ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.