சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் டீப் சீக் என்ற புதிய ஏ.ஐ மொடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது. மற்ற ஏ.ஐ மொடல்களைக் காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சட் ஜி.பி.டி உள்ளிட்ட அமெரிக்க ஏ.ஐ மொடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. பிரீமியம் முறையில் சட் ஜி.பி.டி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏ.ஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏ.ஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் டீப்சீக் ஏ.ஐ குறித்து ஓபன் ஏ.ஐ நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் சாம் ஆல்ட்மேன் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக சாம் ஆல்ட்மேன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
சீன நிறுவனமான டீப்சீக் குறைத்த விலையில் தனது ஏ.ஐ மொடலை உருவாக்கியதாக விளம்பரப்படுத்தியது. ஆனால் ஏ.ஐ மொடலை 6 மில்லியன் டொலரில் உருவாக்கினார்கள் என்பதில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் உள்ளது. நிச்சயமாக அதில் உண்மையான செலவு மறைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் ஏ.ஐ ஒரு நல்ல மொடல்தான். நாங்கள் அதை விட சிறந்த மொடல்களை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.