சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கட்டார் இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடுகளை சரிசெய்ய கட்டாரிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கட்டார் நாட்டிலிருந்து ஜோர்தான் நாட்டைக் கடந்து செல்லும் குழாய் வழியாக சிரியாவின் டெயிர் அலி மின் நிலையத்திற்கு வழங்கப்படும் இந்த இயற்கை எரிவாயுவின் மூலம் நாளொன்றுக்கு 400 மெகா வாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் , சிரியா அரசினால் அந்நாட்டில் தற்போது 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மின்சாரமானது 4 மணி நேரமாக உயரவுள்ளதாக சிரியாவின் இடைக்கால அரசின் மின்சாரத் துறை அமைச்சர் ஒமர் ஷாக்ரோக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சியானது வளர்ச்சிக்கான கட்டாரின் நிதி, ஜோர்தான் நாட்டின் எரி சக்தி, கனிம வள அமைச்சரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் ஆகியவைக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக கட்டார் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்- ஆஸாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினாலும் மேற்கத்தைய நாடுகள் விதித்த தடைகளினாலும் சிரியாவின் பொருளாதாரம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.