சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 ஆம் திகதி அன்று சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது ஐஎஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, “ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்” என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில், 35 க்கும் அதிகமான இலக்குகள் மீது 90-க்கும் மேற்பட்ட துல்லியமான குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழு விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், “எங்கள் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
முன்னதாக, சிரியாவின் பால்மைரா பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
2024 டிசம்பரில் சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்ததையடுத்து நாடு அரசியல் ரீதியாக பலவீனமான நிலையில் உள்ளது.
ஐஎஸ் அமைப்பு தற்போது பலவீனமடைந்திருந்தாலும், சிரியாவின் சில பகுதிகளில் இன்னும் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

