உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரி விதிக்கும்’’ என்று அறிவித்தார்.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ம் திகதி கையெழுத்திட்டுள்ளார். இதில்,இலங்கைக்கு 20 வீதமும் இந்தியாவிற்கு 25 வீதமும் அரவிடப்படவுள்ளது.
சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும். அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீதவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்காளதேசத்துக்கான வரி விதிப்பை முறையே 10 சதவீதம், 17 சதவீதம் குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 2-ம் திகதி அறிவித்த பாகிஸ்தானுக்கான வரி 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும், வங்கதேசத்துக்கான வரி 37 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், இந்தோனேசியாவுக்கான வரி 32 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கம்போடியாவுக்கான வரி 49 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம், ஐரோப்பிய யூனியனின் பெரும்பாலான பொருட்களுக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம், மலேசியாவுக்கு 24 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம், தாய்லாந்துக்கு 36 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.