எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இதில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சதீஸ் குமார் துரைக்கண்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் கவுரி புரொடக்ஷன்ஸ், நியாந்த் மீடியா மலர் மாரி மூவிஸ் சார்பில் கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கடுக்கா என்றால் காய் இல்லை, நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ. அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம்.
ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவுக்கும் வரவில்லை. படத்தின் ஹீரோ, விஜய் கவுரிஷ் , ‘அட்டகத்தி’ தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா பார்வையாளர்களை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை” என்றார்.
தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சி.வி.குமார், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் சவுந்தரராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.