5.2 C
Scarborough

சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார்!

Must read

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

by-G.Kamal

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article