மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற சகலதுறை வீரர் அன்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு 37 வயதான அன்ட்ரே ரஸ்ஸல் விடை கொடுக்கவுள்ளார்.
2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற ரஸ்ஸல், இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 T20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அன்ட்ரே ரஸ்ஸல் மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணத்தினை வென்ற போது முக்கிய பங்களிப்பினையும் வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் நிலையில் ரஸ்ஸலின் ஓய்வானது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.