சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரராக பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் உஸ்மான் டெம்பிலி பெயரிடப்பட்டிருந்தார்.
கடந்த பருவகாலத்தில் பரி ஸா ஜெர்மைன் நான்கு கிண்ணங்களை வெல்வதற்கு உதவிய நிலையிலேயே 28 வயதான டெம்பிலி செவ்வாய்க்கிழமை (16) விருதைப் பெற்றிருந்தார். கடந்த பருவகாலத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கான 53 போட்டிகளில் 51 கோல் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் லமீன் யமால், றியல் மட்ரிட்டின் கிலியான் மப்பேயைத் தாண்டியே இவ்விருதை பிரான்ஸின் டெம்பிலி வென்றிருந்தார்.
ஆண்டின் சிறந்த கோல் காப்பாளராக பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜல்லூயிஜி டொன்னருமா தெரிவாகியிருந்தார். இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூலின் அலிஸன் பெக்கர், அஸ்தன் வில்லாவின் எமி மார்டினெஸ், ஆர்சனலின் டேவிட் ரயா, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் திபோ கோர்துவாவைத் தாண்டியே இவ்விருதை 26 வயதான டொன்னருமா பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஆண்டின் சிறந்த பயிற்சியாளராக பரிஸ் ஸா ஜெர்மைனின் லூயிஸ் என்றிக்கே தெரிவாகியிருந்தார். லிவர்பூலின் அர்னே ஸ்லொட், பார்சிலோனாவின் ஹன்சி பிளிச்சை தாண்டியே இவ்விருதை சம்பியன்ஸ் லீக்கில் பரிஸ் ஸா ஜெர்மைனை சம்பியனாக்கிய என்றிக்கே பெற்றிருந்தார்.
ஆண்டின் சிறந்த அணி பின்வருமாறு, ஜல்லூயிஜி டொன்னருமா (பரிஸ் ஸா ஜெர்மைன்), அஷ்ரஃப் ஹக்கிமி (பரிஸ் ஸா ஜெர்மைன்), வில்லியன் பாச்சோ (பரிஸ் ஸா ஜெர்மைன்), வேர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்), நுனோ மென்டிஸ் (பரிஸ் ஸா ஜெர்மைன்), கோல் பல்மர் (செல்சி), ஜூட் பெல்லிங்ஹாம் (றியல் மட்ரிட்), வித்தின்ஹா (பரிஸ் ஸா ஜெர்மைன்), பெட்ரி (பார்சிலோனா), லமீன் யமால் (பார்சிலோனா), உஸ்மன் டெம்பிலி (பரிஸ் ஸா ஜெர்மைன்).

