அனுராதபுரத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பயணித்த வேனும் லொறியும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது.
இதில், செம்மலையைச் சேர்ந்த 38 வயதான தி.விமலானந்தன் , வள்ளிபுனத்தைச் சேர்ந்த 31 வயதான சசிகுமார் , புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதான நிஷாந்த் , புதுக்குடியிருப்பு, 9ஆம் வட்டாரம் – மல்லிகைத்தீவைச் சேர்ந்த சேர்ந்த 25 வயதான ந.தேனுயன் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் தலாவ – மீரிகம சந்திக்கு அண்மையாக மொரகொட என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் தலாவ, அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.
வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம்-சாவகச்சேரி, நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனத்தை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

