போராட்டக் காலப்பகுதியில் ஒரு குடிமகன் மீது கூட துப்பாக்கிச் சூடு நடத்த தான் உத்தரவிடவில்லை என்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வெறித்தனமான கொலைகாரனாக மாறுவதில் தனக்கு விருப்பமிருக்க வில்லை என்றும் முன்னாள் இராணுவ தளபதியும் முன்னாள் பாதுகாப்பு பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனித்துவத்துக்காக 41 வருடகாலமாக விசேட அர்ப்பணிப்பை செய்த முன்னாள் இராணுவத் தளபதி நேற்று முன்தினம் (31) தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தனது பதவிக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நீண்ட தெளிவுபடுத்தலை வழங்கி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டி ருந்தது. முக்கியமாக அதில், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
‘‘எனது இராணுவ வரலாற்றில் 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் என்பது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்ட சிக்கலான காலப்பகுதியாகும். இராணுவம் என்பது உள்ளக அல்லது வெளியிலிருந்து அரசுக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக முன்னிலையாகும் உத்தியோகபூர்வ ஆயுதப்படையாகும்.
2022 போராட்டம் என்பது உள்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையாகும். அதன்போது அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்ச அதிகாரத்தை மாத்திரம் பயன்படுத்துவதற்கு இராணுவத்துக்கு நான் கட்டளை பிறப்பித்திருந்தேன்.
அப்பாவி குடிமகன் ஒருவன் இராணுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.
நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தை பயன்படுத்தி வெறித்தனமான கொலைகாரனாக மாறுவதில் எனக்கு விருப்பமில்லை. அதன் பிரதிபலன் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அதற்கு சிறந்த உதாரணம், எமது நாட்டுக்கு அண்மையிலுள்ள அரசுகளின் தற்போது உருவாகியுள்ள மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரின் செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள தீமைகளை அடையாளப்படுத்த முடியும்.
அதிகார வெறிக்கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவதுபோன்று அரசை காட்டிக்கொடுக்கும் வகையில் அநாகரீகமாக தாக்குதல் நடத்தும் நோக்கம் இருக்கவில்லை. வெளிநாடொன்றின் கூலிப்படையாகவோ அல்லது வெளிநாட்டு தூதரகமொன்றின் செல்லப்பிராணியாக இருக்கவோ எனக்கு கீழ்த்தனமான நோக்கம் இல்லை.
அவ்வாறெனில், எதற்காக நான் அப்போது அதிகாரத்திலிருந்த ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையாற்றிய அப்போதைய பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்த சந்தர்ப்பத்தில், போராட்டக்காரர்களை சிறைப்பிடித்து விமான படையினூடாக பிரதமரின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
அரசியல்வாதிகளின் வீடுகளை தீக்கிரையாக்க வந்த போராட்டக்காரர்களில் அநேகமானவர்களை விரட்டி அவர்களின் வீடுகளை பாதுகாத்தது ஏன்? இருந்தபோதும் போராட்டக் காலத்தில் முன்னெடுத்த தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆட்சியாளர்களின் புரிதல் எனக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.
இராணுவ வரலாற்றில், நான்கு நட்சத்திரங்களை கொண்டு ஜெனரல் ஒருவர் இராணுவத் தளபதியாக இருந்த பட்டியலில், இரண்டாவது இராணுவ தளபதி நானாவேன். 2022 மே மாதம் 31 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் மீதமிருந்தபோதும் இராணுவ தளபதி பதவியிலிருந்து பாதுகாப்பு பிரதானி பதவிக்கு உத்தியோகபூர்வமாக இடமாற்றம் வழங்கப்பட்டது.
ஆயினும் நான் இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீங்கி பாதுகாப்பு பிரதானியாக கடமையாற்றிக்கொண்டிருந்தபோது அரச அனுமதியுடன் வெளிநாடொன்றில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்ற சென்றிருந்தபோதே அதனை அண்மித்த காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசிலிருந்து தப்பித்துச் செல்ல நேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.