கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்குப் பெற்றுக் கொடுக்கக் காரணமே அவர் ஏற்ற ஆக்ஷன் கதாபாத்திரம் தான். ரஜினியும் கமலும் ஆக்ஷன் கதாநாயகர்களாகத் தங்களை நிலை நிறுத்திகொண்ட காலத்தில் தன்னுடைய தனித்த உடல்மொழியால், வசன உச்சரிப்பால் உச்ச நட்சத்திரம் என்கிற உயரத்தைத் தொட்டவர். ரஜினி, கமல் ரசிகர்களையும் தன்னுடைய திரை வெளிக்குள் இழுத்தவர்.
ஆக்ஷன் நாயகன் என்கிற அடையாளம் அவருக்கு இருந்தாலும் அவர் ஏற்று நடித்த சீரியஸ் கதைக் களங்களில் கூட அவரது நடிப்பில் நகைச்சுவை நடிப்பு அட்டகாசமாக வெளிப்படும். கதாநாயகி, துணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட துணைக் கதாபாத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகளைக் கூர்ந்து கவனித்தாலே நகைச்சுவை நடிப்பிலும் விஜயகாந்த் ஒரு கேப்டன் தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, ஆச்சி மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற முத்திரை பதித்த நகைச்சுவை குணச்சித்திரங்களுடன் கேப்டன் இணைந்தபோது, ரசிகர்கள் சிரிப்பு கடலில் மூழ்கினர்.

