இலங்கை தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான வகைப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவின் 06 நாடுகள், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மாத்திரமே குறைந்த வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2026 நிதியாண்டிற்கமைய 1,136 அமெரிக்க டொலரில் இருந்து 4,495 அமெரிக்க டொலர் வரையான தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியைக் கொண்டுள்ள நாடுகள் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளாக பெயரிடப்படுகின்றன.
குறைந்த வருமானம் பெறும் நாடுகள், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகள், உயர் – நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் மற்றும் உயர் வருமானம் பெறும் நாடுகள் ஆகிய பிரிவுகளில் நாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய ஆண்டில் அமெரிக்க டொலரினூடாக வௌிப்படுத்தப்பட்டுள்ள அட்லஸ் முறைமையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும் நாட்டின் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வகைப்படுத்தல் தயாரிக்கப்படுகின்றது.
உலக வங்கியின் இந்த வகைப்படுத்தலானது நாடொன்றின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பிரதிபலிக்கும் முக்கிய அளவீட்டு காரணியாகும். அத்துடன் இந்த வகைப்படுத்தல் தரவுகள், அபிவிருத்தி நிதியுதவிகள் மற்றும் கடன் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் முக்கியமான காரணியாக அமையுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.