கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மூலத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியின் உறுப்பினரொருவர் தாக்கல் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து குறைந்த மக்கள் தொகை, அதிக நிலப்பரப்பு கொண்டது. இங்கு எண்ணெய் மற்றும் அரிய கனிமவளங்கள் இருக்கின்றன. புவி வெப்பமயமாதலால், அங்கு புதிய கப்பல் வழித்தடங்கள் உருவாகின்றன.
இந்த காரணங்களாலும், ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே அமைந்துள்ளதாலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாகவுள்ளார். ”எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,” என, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அவரது அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.இத்தகைய சூழ்நிலையில், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மூலத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சி உறுப்பினர் ராண்டி பைன் தாக்கல் செய்துள்ளார்.
கிரீன்லாந்தை கையகப்படுத்தவும், இறுதியில் அதை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சட்டபூர்வமான அதிகாரத்தை ஜனாதிபதி ட்ரம்புக்கு இந்த சட்டமூலம் வழங்கும். ஜனாதிகதியை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் இத்தகைய சட்டமூலத்தை தயார் செய்துள்ளதாக, அமெரிக்காவில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

