கானாவில் ஆயுதமின்றி வந்த தொழிலாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் ஒபுவாசி நகரில், பிரபல தங்கச் சுரங்கத் தொழிற்சாலை நிறுவனமான ‘ஆங்கிலோகோல்ட் அஸ்யன்டி’ தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(18) இரவு இந்தச் சுரங்கத்துக்குள் நுழைந்த நபர்கள், நிர்வாகத்திற்கு தெரியாமல் தங்கத் தாதுவை வெட்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 47பேர் காயமடைந்தனர்.
ஆயுதமின்றி வந்த தொழிலாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியது.
ஆனால், 60துக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி ஊடுருவியதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடுருவிய நபர்கள், பாதுகாப்பு அரணை உடைத்து உள்ளே நுழைந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், பதிலுக்கு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கானா ஜனாதிபதி ஜோன் திராமணி மகமா உத்தரவிட்டுள்ளார்.