காசாவில் 60 நாள்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையிலேயே 60 நாள்கள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என்ற தகவலை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
‘காசா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாள்கள் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர வேண்டும். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”- எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, போர் நிறுத்த முயற்சியை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்த அமைதியே தமது நோக்கம் எனவும், காசா மக்களுக்கான ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் எனவும் கன்பரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.