புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராகச் சதி செய்யும் எதிர்க்கட்சி குழுக்கள், தற்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் தொடர்பாகச் சில குழுக்கள் முன்னெடுக்கும் இந்த அவதூறுப் பிரசாரங்களுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆறாம் தரத்திற்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுதியில் (Module) உள்ள இணையத்தள இணைப்பு (Link) ஒன்று தொடர்பாகக் குற்றம் சுமத்தியே, நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரதமருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் இத்தகைய இழிவான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
எவ்வாறாயினும், ஆறாம் தர ஆங்கிலப் பாடத் தொகுதி தொடர்பான இந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே உள்வாரி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஊடாக இது தொடர்பான விசேட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்துத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், பிரதமரை இலக்கு வைத்துத் தொடர்ந்து இத்தகைய அவதூறுகளைப் பரப்புவது, குறித்த தரப்பினரின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே என அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

