ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக ‘கருப்பு’ இருக்கும் என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
சூர்யா பிறந்த நாளுக்கு ‘கருப்பு’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘கருப்பு’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் ‘கருப்பு’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “சூர்யா சார் பிறந்த நாளுக்கு ‘கருப்பு’ டீஸர் வெளியாகும். அவரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தார்களோ, அதெல்லாமே இந்தப் படத்தில் இருக்கும். ’சிங்கம்’ படத்துக்குப் பின் கூரையை பிய்த்துக் கொண்டு போவது மாதிரியான படமாக இருக்கும் என நம்புகிறேன். அந்தளவுக்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, ஸ்வாசிகா, நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.