இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 57 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். சிகந்தர் ராசா 28, ரியான் பர்ல் 17, சீயன் வில்லியம்ஸ் 14 ரன்கள் சேர்த்தனர்.
176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், குசால் மெண்டிஸ் 38 பந்துகிளல், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் சேர்த்தனர். இறுதிப் பகுதியில் கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும், துஷன் ஹமந்தா 9 பந்துகளிலும் 14 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.