17.6 C
Scarborough

கனடா மீது வரி – மீண்டும் உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

Must read

கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், மெக்ஸிகோவும் கனடாவும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் நல்லது செய்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை அவர்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அவர்களிடம் உள்ள பொருட்கள் இனி நமக்குத் தேவையில்லை என்றார்.

அமெரிக்காவிடம் தேவையான அளவுக்கு எண்ணெய் மற்றும் மரக்கட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், வரி சதவிகிதம் காலத்திற்கு ஏற்றாற்போல் உயரவும் குறையவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பில் இருந்து எண்ணெய் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை தற்போது உறுதி செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மிக விரைவில் உறுதியான முடிவெடுக்கப்படும் என்றார்.

இதனிடையே, ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனேடிய நிர்வாகம், எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் எரிசக்தி ஏற்றுமதியை ரத்து செய்யவும் சில பொருட்கள் மற்றும் வளங்கள் மீது ஏற்றுமதி வரி விதிக்கவும் வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ட்ரம்புக்கும் அமெரிக்காவும் எதிரான நடவடிக்கை கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆல்பர்ட்டா பிரீமியர் டேனியல் ஸ்மித், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ட்ரம்பின் கவலைகளை நிவர்த்தி செய்ய கனடா தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

இந்தப் பிரச்சினை சமீபத்திய வாரங்களில் ஸ்மித், பெடரல் அரசு மற்றும் அவரது சக பிரீமியர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி ஆகியோர் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து, வரவிருக்கும் வரி அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க வாஷிங்டனில் உள்ளனர்.

இந்த சந்திப்பில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், மூன்று சுற்று வரி விதிப்புக்கு கனடா தயாராகி வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article