14.5 C
Scarborough

கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை

Must read

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்டது

கடந்த 2022ல் நடந்த இச்சம்பவத்தில் இந்தியாவின் குஜராத் மாகாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று கடும் பனியில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்தது.

இந்த வழக்கில் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் மற்றும் ஹர்ஷ்குமார் பட்டேல் என்ற இந்தியர் சிகாகோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த நவம்பரில் மினசோட்டா நடுவர் மன்றத்தால் தலா நான்கு வழக்குகளிலும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பட்டேல் மற்றும் ஷாண்ட் ஆகியோரின் சட்டத்தரணிகள் அமெரிக்காவின் மின்னசோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தனித்தனியான மனுக்களில் விடுதலை அல்லது புதிய விசாரணையைக் கோரியுள்ளனர்.

விசாரணையின் போது, ​​ஷாண்ட் மற்றும் படேல் ஆகிய இருவரும் சர்வதேச கடத்தல் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் என்றும், இந்தியாவில் இருந்து கனடாவிற்கு மாணவர் விசாவில் மக்களைக் கொண்டு வந்து அவர்களை அமெரிக்க எல்லைக்கு அப்பால் கால்நடையாக அனுப்பினார்கள் என்றும் அரசு தரப்பில் வாதிட்டுள்ளனர்.

உடல் உறையும் குளிரில்

மேலும், டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022 ல் பல சந்தர்ப்பங்களில் மனிடோபா மற்றும் மினசோட்டா இடையே கடத்தல் பயணங்களை மேற்கொண்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

படேல் ஏற்பாடு செய்துள்ள வாடகை வாகனங்களில் அமெரிக்க எல்லையில் சட்டவிரோத புலம்பெயர் மக்களை அழைத்துச் செல்வதற்காக ஷான்டுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

2022 ஜனவரி 19ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ஜெகதீஷ் படேல், இவரது மனைவி வைஷாலிபென் படேல், 11 வயது மகள் விஹாங்கி; மற்றும் அவர்களது மூன்று வயது மகன் தர்மிக் ஆகியோர் உடல் உறையும் குளிரில் சடலமாக மனிடோபாவில் உள்ள ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டனர்.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியானது அமெரிக்க எல்லையில் இருந்து சில மீற்றர் தொலைவு என்றே கூறப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article