இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவியணித் தலைமையதிகாரியும், நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் ஏழு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்தார். இலங்கையின் 9ஆவது பெரிய ஏற்றுமதி சந்தையாக கனடா விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புக்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

