கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் “சரியான திசையில் முன்னேறி வருகின்றன” என்றும், கனேடிய நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தகத்தை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கும் நோக்கில் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்றும் தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலி கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நேரலையாக ஒளிபரப்பாகும் ஒரு நேர்காணலில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் மார்க் கார்னி நடத்திய சந்திப்பு தொடர்பில் தனது கருத்துக்களை ஜோலி விளக்கினார்.
“பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே மிகவும் மரியாதைக்குரிய விவாதமும் தொனியும் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள் என்று நினைக்கிறேன்,”
‘டிரம்ப்பை நேரில் சந்திப்பது முக்கியம். காரணம் ஜனாதிபதி இறுதியில் ஒப்பந்தத்தை உருவாக்குபவர்’ என அமைச்சர் மேலும் கூறினார்.
“எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது எமக்குத் தெரியும். அதேபோல பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் இடம்பெற்று வருகின்றன என்பதும் எங்களுக்குத் தெரியும்,” என்று ஜோலி கூறினார்.
மேலும் பல மாதங்களாக இருதரப்பு முயற்சிகளுக்குப் பிறகும் இன்னும் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை. எனினும் அமெரிக்க அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்காக கனடா தொடர்ந்து களத்தில் இறங்கி செயற்படுகின்றது.
ஆனால் கார்னியின் நிலைப்பாட்டுக்கு அமைவாக ஒப்பந்தம் எட்டப்படும் என்பதோடு கனடா இந்த நிலையில் இருந்து மீண்டு விடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

