கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் கனடாவுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதற்கு நேர்மாறாக, தனது நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வாய்ப்புள்ளதாகவும், சீனாவுடனும் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளதையும் Trump உறுதிப்படுத்தினார். அத்துடன் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட Australia வின் உறவையும் அவர் நினைவு படுத்தியிருந்தார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் Howard Lutnick மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த செனட்டர்கள் குழுவுடனான சந்திப்பின் பின்னரே தான் இந்த விடயத்தில் நம்பிக்கை கொண்டதாக கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc கூறிய மறுநாள் Trump இன் இக்கருத்து வெளிவந்துள்ளது. மேலும் LeBlanc கூறும்போது, அமெரிக்கர்களுடனான மூடிய கதவு பேச்சுவார்த்தைகள் சிக்கலானவை என்றும் August 1 ஆந் திகதிக்குள் பிரச்சினை தீர்க்கப்படாமல் போகலாம் என்றும் கூறினார்.
அன்று, எல்லையைக் கடக்கும் கனேடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 35 சதவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்தார். கனடா மேலும் பதிலடி கொடுத்தால் அந்தக் கட்டணங்கள் இன்னும் அதிகமாகலாம். இருப்பினும், அவை இரு நாடுகளின் தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத சிறுபான்மை பொருட்களுக்கு மட்டுமே. இந்த ஒப்பந்தத்தில் Trump தனது முதல் பதவிக்காலத்தில் கையெழுத்திட்டு அடுத்த ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.
இரும்பு, அலுமினியம் மற்றும் automobiles மீதான Trump பின் வரிகளின் சுமையை தாங்கிவரும் கனடா August 1 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் செப்பு வரிகளால் மேலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.