கனடாவில் தட்டம்மை நோய் காரணமாக இந்த ஆண்டில் பதிவான இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.
அல்பெர்டாவில் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், கருவிலேயே நோய் தொற்றுக்குள்ளான சிசுவொன்று பிறந்து சில நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இது, மாகாணத்தில் இதுவரை பதிவான முதல் மரணம் ஆகும். குழந்தை பிறந்த சில காலத்திலேயே இறந்துவிட்டதாக அல்பெர்டா முதன்மை மற்றும் தடுப்பு சுகாதார சேவைகள் அமைச்சர் அட்ரியானா லா கிரேஞ்ச், தெரிவித்துள்ளார்.
ஆனால், தாயின் தடுப்பூசி நிலைமையோ, மரணம் நிகழ்ந்த இடமோ குறித்து விவரங்கள் வழங்கப்படவில்லை.
அல்பெர்டாவில் இவ்வருட வசந்த காலத்தில் முதல் தடவையாக தட்டம்மை சம்பவங்கள் அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய நிலைமை ஏற்படாது என கருதியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது மனதை உடைக்கும் இழப்பு. ஒரு குழந்தையை இழப்பதன் வலியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அமைச்சர் குறிப்பிட்டார்.
இது, கனடா முழுவதும் பரவியுள்ள தொற்றுநோயுடன் தொடர்புடைய இரண்டாவது மரணம் ஆகும். கடந்த ஜூன் மாதத்தில் ஒன்டாரியோவில், கருவிலேயே தட்டம்மை தொற்றுக்குள்ளான ஒரு குழந்தை உயிரிழந்தது.
அப்பொழுது, தாயார் தடுப்பூசி போடப்படாதவர் எனத் தெரிவிக்கப்பட்டது. அல்பெர்டா மற்றும் ஒன்டாரியோ தற்போது தட்டம்மையினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணங்களாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.