கனடாவில் கோவிட்-19 காலத்தில் வழங்கப்பட்ட நிவாரண உதவித் தொகைகளில், கனடா வருமான திணைக்களம் தற்போது 10.35 பில்லியன் கனடிய டொலர் தொகையை மீட்டெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2025 நவம்பர் 30 நிலவரப்படி, கனடியர்களுக்கு மொத்தமாக 83.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கோவிட் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கனடிய வருமான திணைக்களம் பேச்சாளர் நினா யூசுப்போவா (Nina Ioussoupova) தெரிவித்துள்ளார்.
இதில், கனடா அவசரகால வருமான நிவாரணத் திட்டம் (CERB) மூலம் மட்டும் 45.3 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் நிவாரணத் தொகைகளுடன் தொடர்புடைய நிலுவைத் தொகைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, 2023 ஆம் ஆண்டு முதல் தகுதி இல்லாமல் நிவாரணம் பெற்றவர்கள் அல்லது அதிகமாக பணம் பெற்றவர்களுக்கு திருப்பிச் செலுத்துமாறு அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் யூசுப்போவா தெரிவித்தார்.
இந்த நிலுவைத் தொகைகள், அதிகமாக வழங்கப்பட்ட பணம் அல்லது தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகைகள் காரணமாக உருவானவை என்றும் அவர் விளக்கினார்.
2025 நவம்பர் 30 வரை, சுமார் 14 இலட்சம் பேர் தனிநபர் கோவிட் நிவாரணத் தொகைகளுடன் தொடர்புடைய கடன்களில் இருந்து சுமார் 3.3 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தியுள்ளதாக கனடிய வருமான திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலுவைத் தொகைகளை செலுத்தாமல் தவிர்ப்பவர்களுக்கு எதிராக கனடிய வருமான முகவர் நிறுவனம் “உறுதியான மற்றும் பொறுப்பான” நடவடிக்கைகள் எடுப்பதாகவும், தேவையெனில் சட்ட நடவடிக்கைகளின் மூலம் கடனை மீட்டெடுக்கவும் தயாராக இருப்பதாகவும் நினா யூசுப்போவா எச்சரித்துள்ளார்.

