ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளராக பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணர் ரிச்சர்ட் ஃபாக், தான் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டதாகத் அறிவித்துள்ளார்.
95 வயதான ரிச்சர்ட் ஃபாக், சட்ட அறிஞரான தனது மனைவி ஹிலால் எல்வருடன் டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (13) தடுத்து வைக்கப்பட்டார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சாதாரண செயல்முறை
இந்நிலையில் காஸா விவகாரத்தில் கனடாவின் பொறுப்பு குறித்து ஆராயும் ‘பாலஸ்தீன தீர்ப்பாயத்தில்’ பங்கேற்பதற்காக இவர்கள் ஒட்டாவாவுக்குப் பயணம் செய்தபோது தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
கனடா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் “நீங்கள் இருவரும் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்” என்று கூறியதாகவும், இது தன் வாழ்வில் முதன்முறையாக பெற்ற அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார,
கனடாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு, இஸ்ரேல்-காஸா பற்றிய அவர்களின் பணிகள் மற்றும் இனப்படுகொலை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இந்தக் கேள்விகள் ‘ஒழுங்கற்றதாக’ இருந்ததாகவும் ரிச்சர்ட் ஃபாக் கூறினார்.
இந்த விசாரணை, காஸாவில் “உண்மையைப் பற்றிப் பேச முயற்சிப்பவர்களைத் தண்டிக்க” நடக்கும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியெனத் தாம் நம்புவதாகவும் ரிச்சர்ட் ஃபாக் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாலும், அனைத்துப் பயணிகளும் இரண்டாம் நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சாதாரண செயல்முறை என்றும் கூறியுள்ளதாக அந்த தகவ்ல்கள் கூறுகின்றன.

