கனடாவின் (Canada) அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த ஆண்டில் $96.8 பில்லியனாக உயர்ந்து, 2007-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உச்சத்தை எட்டியுள்ளதாக (Statistics Canada) தெரிவித்துள்ளது.
இதனை “கனடியர்களுக்குக் கிடைத்த நற்செய்தி” எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வரவேற்றுள்ள போதிலும், பொருளாதார நிபுணர்கள் இதில் ஒளிந்திருக்கும் சவால்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
TD Bank பொருளாதார நிபுணர் மரியா சொலோவியேவா (Maria Solovieva) மற்றும் SHIELD Institute நிபுணர் கெய்லி டிசென் (Kaylie Tiessen) ஆகியோர், முதலீட்டின் அளவை விட அதன் தன்மையே முக்கியம் என்கின்றனர்.
குறிப்பாக, புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை விட, ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவது (M&A) நாட்டுக்கு நீண்டகால பலனைத் தராது என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
முடிவெடுக்கும் அதிகாரம் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, உள்ளூர் விநியோகஸ்தர்களும் உயர் பதவிகளும் பாதிக்கப்படலாம் என்பதே நிபுணர்களின் கவலையாக உள்ளது.

