பிரிட்டிஷ் அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், கனடாவும் அதையே பின்பற்ற வேண்டிய நேரம் இது என ஒரு கனடிய செனட்டர் கூறுவதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அரசியலில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் முயற்சிக்கும் வகையில், வாக்களிக்கும் வயதை 18 இலிருந்து 16 ஆகக் குறைப்பதாக இங்கிலாந்து கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்றும், செனட்டர் மரிலூ மெக்பெட்ரான் கூறியுள்ளார்.
கனடாவில் இப்போது எடுக்கப்படும் முடிவுகள் இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் என்றும், இளையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்துவது “தர்க்கரீதியானது” மற்றும் “நியாயத்தைப் பற்றியது” என்றும் மெக்பெட்ரான் கூறினார்.
குறிப்பாக 16 வயது சிறுவர்கள் பலர் ஏற்கனவே வேலை செய்து வரி செலுத்துவதால், இது ஜனநாயகத்திற்கும் நியாயத்திற்கும் நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 வயது ஆர்வலர் உட்பட சில கனடியர்கள் இதை ஒப்புக்கொண்டு மாற்றத்தை வலியுறுத்துகின்றனர்.
இது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை என்றாலும், இங்கிலாந்தின் முடிவு கனடாவையும் இதைப் பின்பற்ற ஊக்குவிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.