கனடாவிற்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் நேரடியாக கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த கூட்டுத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என கனடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கனடாவில் யூத சமூகத்தை குறிவைக்கும் தீவிரவாத தாக்குதல் நிகழ வாய்ப்பு “யதார்த்தமானது” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை அறிக்கையில், “2025 விடுமுறை காலம் தொடர்பாக, குறிப்பாக யூத சமூக நிகழ்வுகளை குறிவைக்கும் நம்பத்தகுந்த, உடனடி அச்சுறுத்தல் குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தனிநபர் அல்லது சிறிய குழு குறைந்த முன் எச்சரிக்கையுடன் தாக்குதலுக்கு முன்வர வாய்ப்பை நிராகரிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுமுறை நிகழ்வுகள், குறிப்பாக ஹனுக்கா கொண்டாட்டங்கள், மேற்கு நாடுகள், மத மற்றும் இன சமூகங்கள், அவற்றின் அடையாள இடங்களை குறிவைக்கும் தீவிரவாதிகளின் “ஆர்வத் தலங்களாக” தொடரக்கூடும் என அறிக்கை எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சில காவல் துறைகள் யூத சமூக பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கனடா முழுவதும் யூத சமூகத்திற்கு எதிரான வன்முறை மற்றும் யூத விரோத வெறுப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

