செவ்வாய்கிழமை வெளியிடப்படவுள்ள மார்ச் மாதத்திற்கான பண வீக்கம் 2.6 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய டொலரின் பெறுமதி குறைவினால் அதிகரித்த இறக்குமதி செலவு மற்றும் அதிகரித்து வரும் உணவு விலைகள் போன்ற காரணங்களால் இந்த வாரம் கனடாவில் மற்றொரு உயர்ந்த பணவீக்க அளவீடு எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக நோக்கும் போது மார்ச் மாதத்தில் கட்டணங்கள் மிதமான அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் கனடா அதன் அச்சுறுத்தப்பட்ட பழிவாங்கும் வரிகளில் பெரும்பகுதியை இன்னும் செயற்படுத்தவில்லை.
அமெரிக்க உலோக வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா கடந்த மாத நடுப்பகுதியில் 30 பில்லியன் டொலர் எதிர்க்கட்டணங்களை விதித்தது ஆனால் அமெரிக்கா சில வரி அச்சுறுத்தல்களை நிறுத்தி வைத்திருப்பதால் கனடாவும் 125 பில்லியன் டொலர் பதில் கட்டணங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை என நிறுத்தி வைத்தது. இவை மிதமான பணவீக்கத்தில் செல்வாக்கு செலுத்தின.
பணவீக்கம் குறித்த சமீபத்திய அறிக்கை வெளியான பின்னர் புதன்கிழமையன்று கனேடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை எடுக்க உள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கம் அமுல்படுத்தப்படும் காபன் வரி நீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கனேடிய டொலர் உயர்வு போன்ற காரணிகள் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் குறைவதற்கு வலுச்சேர்க்கும் என நம்பப்படுகின்றது.
பணவீக்க எதிர்பார்ப்புகள் பல ஆய்வாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதை விட அர்த்தமுள்ள வகையில் அமைந்துள்ளன எனவே கனேடிய மத்திய வங்கி அதன் சமீபத்திய விவாதங்களில் அதில் கவனம் செலுத்தியதைக் காண்கிறோம் என்று Desjardins Group பிரதித் தலைவரான பொருளாதார நிபுணர் ரெண்டால் பெட்லட் கூறினார்.