சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் முதல் தடவையாக 10 இ;டங்களுக்குள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல, இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க 6ஆம் இடத்தையும், வனிந்து ஹஸரங்க 8ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர்.
இலங்கை – பங்களாதேஷ் நடைபெற்று வந்த ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்த பின்னர், ஐசிசி புதிய ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுகளுக்கான தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேறி உள்ளனர்.
அந்தவகையில் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பிரகாசித்து, ஒரு சதம். ஓர் அரைச் சதத்துடன் மொத்தமாக 225 ஒட்டங்களைக் குவித்து இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக மாறி தொடர் வெற்றியில் பெரும் பங்காற்றிய குசல் மெண்டிஸ் 20ஆவது இடத்திலிருந்து 10 ஆவது இடத்திற்கு (669 தரநிலைப் புள்ளிகள்) முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக அவர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இரண்டு அரைச் சதங்களைக் குவித்த சரித் அசலங்க, தரிவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தொடரில் பிரகாசிக்கத் தவறிய பெத்தும் நிஸ்ஸங்க 6 இடங்கள் சரிந்து 20ஆவது இடத்திற்கும், ஜனித் லியனகே 7 இடங்கள் முன்னேறி 44வது இடத்திற்கும் வந்துள்ளார்.
இதனிடையே, பங்களாதே{டனான ஒருநாள் தொடரில் மஹீஷ் தீக்ஷன பிரகாசிக்காதபோதிலும் அவர் தொடர்ந்தும் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கின்றார். எனினும், அவரது தரநிலைப் புள்ளிகள் 680இல் இருந்து 671க்கு சரிந்துள்ளது.
இந்த தொடரில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ 23 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தை இந்தியாவின் அக்சார் பட்டேலுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன், 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வனிந்து ஹஸரங்க, 11 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
துனித் வெல்லலகே 5 இடங்கள் முன்னேறி 31வது இடத்திற்கு முன்னேறி உள்ளதுடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடிய துஷ்மந்த சமீர 99ஆவது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையில், ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, பங்களாதேஷ் அணியிடம் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் 5ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.