6.8 C
Scarborough

ஐஸ்லாந்தில் முதன்முறையாக தென்பட்ட கொசுக்கள்!

Must read

ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.

ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ரக கொசுக்கள் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தென்படுபவை. ஆனால், இவை எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்லாந்தில் நிலவும் நடுக்கும் குளிரும், தேங்கிய நீர்நிலைகள் இல்லாத சூழலும் தான் அங்கு இதுவரை கொசுக்கள் இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஐஸ்லாந்தில் பல முறை அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸை ஐஸ்லாந்து சந்தித்திராத நிலையில் இந்த ஆண்டு மே மாதம் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேல் 20 டிகிரி செல்சியஸைக் கடந்து வெப்பம் பதிவானதாகவும், ஒரு முறை 26.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்பு ஐஸ்லாந்தில் பனிப்பாறைகள் உருகக் காரணமானது என்றும், இதுவே, கொசு உற்பத்தியாகக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொசுக்கள் எப்படி நாட்டுக்குள் வந்தது என்பது குறித்து தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சில ஆய்வாளர்கள், “பொதுவாகக் கொசுக்கள் கப்பல்கள், அதில் வரும் கன்டெய்னர்கள் மூலம் பிறநாடுகளுக்குப் பரவும். அதனால் துறைமுகப் பகுதியில் தென்பட்டால் வெளிநாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லலாம். ஆனால், இந்த கொசுக்கள் ஐஸ்லாந்தின் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்துள்ளன. அதனால், அவை எண்ணிக்கையில் இன்னும் அதிகமாக ஐஸ்லாந்தில் இருக்கும் எனத் தோன்றுகிறது” என்று கூறுகின்றனர்.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article