இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மா்மமான முறையில் காணாமல்போன மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய எம்.எச்370 என்ற விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லோக் வெளியிட்டுள்ளார்.
எம்.எச் 370 விமானத்தைத் தேடுவதில் மீண்டும் ஈடுபட கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்காவின் ஓஷன் இன்பினிட்டி(Ocean Infinity)என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ,”நிறுவனத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் மீண்டும் இந்த விமானத்தை தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் பணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற பேச்சுவார்த்தையில் இதுவரை நாங்கள் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
குறித்த விமானமானது இந்தியப் பெருங்கடல் பகுதியை கடக்கும்போது திடீரென காணாமல் போனது .அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
விமானத்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இன்று வரை அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.