Liberal அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய மசோதா வியாழக்கிழமை சட்டமாக மாறியுள்ளது. Ottawa அவர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை மதிக்கவில்லை என்றால், பரவலான போராட்டங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு வழிவகுக்கும் என்று பழங்குடியினத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சட்டங்களை புறந்தள்ளி தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அதிகாரத்தை மசோதா C-5 வழங்குகிறது. மசோதாவின் ஆரம்ப வரைவு Ottawa விற்கு இந்திய சட்டத்தை ஓரங்கட்டுவதற்கான அதிகாரத்தை வழங்கியது எனினும், அந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மசோதாவிலிருந்து நீக்கப்பட்டது.
பழங்குடி சமூகங்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் திருத்தங்களை பரிந்துரைக்கவும், சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் கால அவகாசம் வழங்குமாறு பழங்குடியினத் தலைவர்கள் பலர் செனட்டர்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது, அரசாங்கத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த புதிய அதிகாரங்களை கையகப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாக பழங்குடியினர் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் விமர்சிக்கின்றன.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் வெளிப்படையான, சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதல் இல்லாமல் திட்டங்களை அங்கீகரிக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காக செனட்டர் Paul Prosper ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார் ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா, பொதுச் சபையில் விரைவாக நிறைவேற்றப்பட்ட பின்னர், புதன்கிழமை மேல் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. செனட் வியாழக்கிழமை இந்த மசோதாவை நிறைவேற்றியது, அதே நாளிலேயே அது அரச ஒப்புதலையும் பெற்று சட்டமாக மாறியது.
கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், ஏனைய வளர்ச்சிக்கு சாதகமான குழுக்கள் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட வேகத்திற்கும் அது உருவாக்கக்கூடிய திட்டங்களுக்கான ஆற்றலுக்கும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.