உக்ரைன் மீது நள்ளிரவில் 800-க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு ரஷ்யா மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் பல்வேறு வகையான 13 ஏவுகணைகளாலும் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் விமான படைக்கான செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாத் செய்தியாளர்களிடம் இதனை உறுதி செய்துள்ளார்.
இதில், உக்ரைனின் 37 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. எனினும், 747 டிரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகளை உக்ரைன் படை மறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால், உடைந்த பாகங்கள் 8 இடங்களில் விழுந்துள்ளன.
போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. போர்நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப் உடன் புடின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், உக்ரைன் மீது இந்த பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் யுத்தம் ஆரம்பித்தது. உக்ரைனின் கீவ், கார்கிவ். டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது.இந்நிலையில் 3 ஆண்டுகளாக போர் நீடிக்கின்றது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதேநேரம் ரஷ்யாவுக்கு வடகொரியா மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது