சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக எஸ்சிஓ வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
” ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஐ.நா.வின் ஆட்சி மன்ற அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையை எஸ்சிஓ அமைப்பு பின்பற்றுகிறது. உலகத்தின் நன்மைக்காக எஸ்சிஓ பாடுபடும். தீவிரவாதம், பிரிவினைவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தின. குறிப்பாக ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான ஈரான் மக்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்ட விதிகள், ஐ.நா. சபை விதிகளுக்கு எதிரானது. இந்த தாக்குதலால் உலக அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதலை எஸ்சிஓ மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இடையே வர்த்தக போக்குவரத்தை மேம்படுத்த வடக்கு- தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்தடங்கள் உருவாக்கப்படும். சீனா- கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தானை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கப்படும் எனவும் மேற்படி கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.