ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும், இந்தச் சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது.
இந்நிலையில், அந்நாட்டில் இந்தச் சட்டத்தை மீறும் பெண்களை கண்டுபிடிக்கவும், ஹிஜாப்பை முழுமையாக கடைப்பிடிக்கச் செய்யவும் ஈரான் அரசு கண்காணிப்புக்கமரா உள்ளிட்ட நவீன முறைகளை கையாள்வதாக ஐக்கிய நாடுகளின் சபையானது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டுபிடிக்க ஈரான் அரசு பெரும்பாலும் இந்தச் சட்டங்களை ஆதரிக்கும் அந்நாட்டு மக்களையே சார்ந்துள்ளதாகவும், ஹிஜாப்பை அணிவதும் அதை மீறுபவர்களை கண்டுபிடித்து புகாரளிப்பதும் மக்களின் பொறுப்பு என்ற பிம்பத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை மீறும் பெண்கள் குறித்து மக்கள் புகாரளிக்க ‘நாஸர்’ எனும் செயலியை ஈரானிய அரசு அறிமுகம் செய்துள்ளதாகவும் அதன் மூலம் கார், பஸ், போன்ற வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் ஹிஜாப் அணியாமல் செல்வது குறித்து புகாரளிக்கப்பட்டால் உடனடியாக அவர்களது வாகனத்தை அடையாளம் கண்டுபிடித்து அவர்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தில், ஈரான் அரசு மின்னனு சாதனங்களின் உதவியைச் சார்ந்துள்ளதாகவும், ட்ரோன் போன்ற நவீன சாதனங்களைக் கொண்டு பொது இடங்களில் பெண்களை கண்கானிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.