ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 490 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில மருத்துவமனைகள் இறந்த அல்லது காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்படுபவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று தெஹ்ரானில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
அவர்களில் பலர் தலை அல்லது மார்புப் பகுதியில் சுடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரபடுபவர்களுக்கு அடிப்படை சிகிச்சை கூட வழங்க போதுமான நேரம் இல்லை என்றும், சில மருத்துவமனைகளின் பிணவறைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் தொடங்கிய இணைய முடக்கம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்கு ஈரான் பதிலளித்துள்ளது, ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரானை தாக்கினால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

