அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தையும், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செயற்திறனுடன் செலவிட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி நோக்கங்களை அடைய முடியாது போகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகையில் முன்பிருந்த நிலையை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

