மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
இதற்காக அவர் தனி தீவையே வாங்கி வைத்திருந்தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்களிலேயே நியூயார்க் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், 2006-ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கின் போது, வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 பெண்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியானது என்று தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் குடும்பத்தார் கூறும்போது, “அந்த பெண்கள் இருவரும் ஹாக்கிங்கின் நீண்ட கால மருத்துவப் பணியாளர்கள் ஆவர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர்கள் அவருடன் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது” என்று தெரிவித்துள்ளனர்.

