14.7 C
Scarborough

இல்மனைட் அகழ்வதற்கு அனுமதியில்லை ரவிகரன் எம்.பி. முடிவு

Must read

முல்லைத்தீவு – கொக்கிளாய் தொடக்கம், செம்மலைவரை ‘மிஸ்வெஸ்ட் ஹெவி சாண்ட் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனம் இல்மனைட் அகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்த நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கடுமையான எதிர்ப்பினையடுத்து இல்மனைட் அகழ்வதற்கு அனுமதி வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏற்கனவே கொக்கிளாயில் இல்மனைட் அகழப்பட்ட இடங்களும் குறித்த நிறுவனத்தால் சீர்செய்யப்படவேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோதே இந்தவிடயம் தொடர்பில் பேசப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இல்மனைட் அகழ்வதற்கு அனுமதி வழங்கமுடியாது. கொக்கிளாய் முகத்துவாரத்தில் ஏற்கனவே மக்களுக்குரிய 44 ஏக்கர் காணியில், மக்களின் அனுமதி பெறப்படாமல் இல்மனைட் அகழ்வு செய்யப்பட்டதால் அந்த இடங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அப்பகுதியில் இல்மனைட் அகழ்ந்தால், கடல் நீர் உட்புகும், கடற்றொழில் பாதிக்கப்படும், கரவலைத் தொழில் பாதிக்கப்படுமென அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு ஏற்கனவே அந்த மக்களால் தெரிவிக்கப்பட்டதைப்போலவே தற்போது அங்கு மிகமோசமான பாதிப்பு நிலமைகள் காணப்படுகின்றன.

இந் நிலையில் முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளை அழிவுறச் செய்கின்ற நோக்கத்திலேதான் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்கின்ற கருத்தும் எமது மக்களிடம் காணப்படுகின்றது.

இவ்வாறு ஏற்கனவே இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கொக்கிளாயில் மிகமோசமாகப் பாதிக்கப்படுள்ள பொதுமக்களின் காணிகள் சீர்செய்து கொடுக்கப்படுவதுடன், பாதிப்புகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவேண்டும்.

இனி இவரும் இல்மனைட் அகழ்விற்கென முல்லைத்தீவிற்கு வருகைதரக்கூடாது. அதற்கு அனுமதிகளும் வழங்கப்படக்கூடாது. அதனை மீறிச் செயற்பட்டால் எமது மக்களின் எதிர்பு மிகக் கடுமையாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இல்மனைட் அகழ்விற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்டதுடன், ஏற்கனவே இல்மனைட் அகழ்வின்மூலம் பகுதியை குறித்த ”மிட்வெஸ்ட் ஹெவி சான்ட்ஸ் பிறைவேட் லிமிட்டெட்” நிறுவனம் சீர்செய்யவேண்டுமென ஆளுநர் வேதநாயகத்தினால் கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், தீர்மானமும் எடுக்கப்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article