இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் சங்கத்தின் தலைவர் அமைச்சர் (வைத்தியர்) உபாலி பன்னிலகேவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் (கலாநிதி) சிரி வால்ட் (Dr.Siri Walt) மற்றும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் (வைத்தியர்) உபாலி பன்னிலகே, சுவிட்சர்லாந்திற்கு அண்மையில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், சுவிஸ் ஆட்சிமுறைக்கு மற்றும் சமூகம் குறித்த பெறுமதியான அறிவை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இந்தப் பயணத்துக்கு அழைப்பு விடுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கும், இந்தப் பயணத்தின்போது ஆதரவு வழங்கிய (கலாநிதி) சிரி வால்ட் மற்றும் இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஆய்வுப் பயணத்தில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தமது கருத்துக்களை இதன்போது பகிர்ந்துகொண்டதுடன், சுவிஸ் ஆட்சிமுறை அதன் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பிரஜைகளை மையப்படுத்திய அணுகுமுறை தொடர்பில் பாராட்டினர். பொதுமக்களின் செயலூக்கமான பங்கேற்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அந்நாட்டின் ஜனநாயக கலாசாரத்தையும் அவர்கள் பாராட்டினர். சுவிட்சர்லாந்து மக்களின் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிட்ட தூதுக்குழுவினர் இவை நாட்டின் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றன என்றும் குறிப்பிட்டனர்.
ஆய்வுப் பயணத்தின்போது அவதானிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை இலங்கைக்கு ஏற்றவகையில் பயன்படுத்தலாம் எனவும் ஆட்சிமுறை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கு அவை உதவும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

