இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வரை நாட்டில் 221 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், யானைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அழிவைச் சந்தித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் கொல்லப்படுவது இந்த விகிதத்தில் தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் தம்புள்ளை திகம்பதஹ வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த யானைகள் பல நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மூன்று தனித்தனி இடங்களில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யானைகளில் ஒன்று சுமார் 40 வயதுடையது என்றும், ஏனைய இரண்டும் முறையே 16 மற்றும் 15 வயதுடையவை என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.