இலங்கையின் பொது போக்குவரத்து அமைப்பை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசரத் தேவையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகள், போக்குவரத்து நெரிசல், வாகன இறக்குமதியின் அதிக செலவு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “ட்ரீம் டெஸ்டினேஷன் ” திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் , “கிளீன் ஸ்ரீலங்கா ” திட்டம் ஊடாக இலங்கை முழுவதும் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்த தனியார் துறை பங்குதாரர்களை இணைத்து கொள்ளும் நோக்கில் இந்த “ட்ரீம் டெஸ்டினேஷன் ” திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்வில் பங்கெடுத்த ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் தற்போதுள்ள மட்டத்தில் சீர்திருத்தங்களைத் தொடர்வது மட்டுமன்றி , நாட்டை முன்னேற்றத்தின் புதிய கட்டத்திற்கு உயர்த்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் தலைமையைப் போலவே, அரசாங்கம் ஏற்கனவே வேரூன்றிய அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன் நிலையான மற்றும் நீடித்த கட்டமைப்பாக மாற்றத்தை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று தொடங்கப்பட்ட “ட்ரீம் டெஸ்டினேஷன் ” திட்டம், நாடு முழுவதும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் அழகியல் ரீதியாக மகிழ்ச்சிகரமான ரயில் சேவைகளைநிறுவுவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும.
இதில் விசேட தேவைகள் உள்ளவர்கள் உட்பட அனைத்து பயணிகளது வசதியையும் அணுகலையும் உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.