நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.
முற்பகல் 10.15க்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29 அளவில் மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படும்.
இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்பவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக, காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன.
இதேநேரம், இன்றைய தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் நீதி வேண்டியும் ஒன்றுபட வேண்டும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ட்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு – கல்லடி பாலத்துக்கு அருகில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கொடிகள் ஏற்றப்பட்ட 2 மிதக்கும் தூபிகள் நேற்று இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினரும், காவல்துறையினரும் அதனை மீட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மன்னாரில் அனுஷ்டிப்பு!
தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளடங்களாக சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அனுஷ்டிப்பு!
இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
அந்தணர் ஒன்றியத்தின் ஆலோசகர் ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.
2009ஆம் ஆண்டு யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.
அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பபட்டு 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
கொழும்பில் நினைவேந்தல்!
கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந் நிலையில், இன்று (18) காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.